பிள்ளையார் சுழி போட்டு எதையும் தொடங்கும் வழக்கம் சைவ சமயத்தில் தொன்று தொட்டு உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
ஓலை சுவடிகளில் எழுத தொடங்கிய ஆரம்ப காலக் கட்டங்களில் ஓலையின் வலிமையை (சேர்பதம்) அறிய உ என்ற எழுத்தை பயன்படுத்தினர் என்ற வழக்கு சொல் உண்டு.
தமிழ் நாட்டை பொருத்த வரை, விநாயகர் வழிபாடு பிற்காலத்தில் தான் வந்ததது. அதற்கு முன்பு இருந்தே சுழி இடும் பழக்கம் இருந்துள்ளது.
இருப்பினும், சைவ சமய கடவுளான விநாயகருடன் உ என்ற சொல் மிக நெருங்கிய தொடர்புடையது. ஏன் இந்த எழுத்துக்கு தொடர்பு வந்ததது என்பதை பார்ப்போம்.
நாயகன் என்பது தலைவனை குறிக்கும் பதம். அச்சொல்லுக்கு முன் வி என்ற விகுதி சேருவதால் விநாயகன் அதாவது ஈடு இணையற்ற தலைவன் என்ற பொருள் படும். எனவே தான் எதிலும் விநாயகர் முதன்மை இடத்தை பெறுகிறார்.
பிரணவ அங்கங்கள்
பிரணவ வடிவாகிய ஓம் என்ற ரூபத்தில் காட்சி தருபவர் பிள்ளையார். சைவ சமய சித்தாந்த தத்துவமாகிய பிரணவத்தின் அங்கங்கள்
அகரம் ( சிவம்)
உகரம் ( சக்தி)
மகரம் ( மலம்)
நாதம்( மாயை)
விந்து ( உயிர்)
இவற்றில் நாதத்தின் வரிவடிவ குறியீடு கீறல், விந்துவின் வரி வடிவ குறியீடு வட்டம் இரண்டின் இணைவே உ என்ற சுழி.
உமையவள் மற்றும் உமாபதி ஆகிய விநாயகரின் தாய் தந்தையர் முதல் எழுத்து உ என சொல்வோரும் உண்டு.
பிள்ளையார் சுழி தோன்றிய புராண கதை
ஒருமுறை கைலயத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் வியட்டிப் பிரணவம், சமட்டிப் பிரணவம் என்ற பிரணவ மந்திரங்களை தியானிக்க தொடங்கினர். அந்த இரு பிரணவ சக்திகளும் உருப் பெற்று அண்ட சராசங்களை வலம் வர தொடங்கின. சிவனும் பார்வதியும் ஜெபிக்கும் உக்ரம் அதிகரிக்க , அதிகரிக்க பிரணவ சக்திகளின் சுழற்சி வேகமும் அதிகரிக்க தொடங்கின.
அவற்றின் சுழற்சியையும், வேகத்தையும் தேவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அனைவரும் செய்வதறியாது பிள்ளையாரிடம் சென்று , விநாயக பெருமானே தங்களது அம்மையப்பரால் சங்கல்பிக்கப்பட்ட இரு பிரணவங்களின் சுழற்சியின் வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.
இதன் படைப்பின் காரணமும் எங்களுக்குப் புரியவில்லை. தாங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு தர வேண்டும் என்று வேண்டி நின்றனர். நிலைமையை உணர்ந்த விநாயகப் பெருமான், உடனே தமது திருக்கரத்தால் பெருவயிற்றைத் தடவி கொடுத்தார்.
அகமர்தசன மகரிஷி தோற்றம்
அவர் நாபியிலிருந்து வெளிப்பட்ட அகமர்தசன மகரிஷி என்பவர் உதயமானார். அவர் பிள்ளையாரின் கட்டளையை ஏற்று, அதிவேகமாக சுழன்று ஓங்கார உருவங்களின் இடையே அமர்ந்து தமது தபோ வலிமையால் வியட்டி மற்றும் சமட்டி பிரணவங்களை கட்டுப்படுத்தி, உ என்ற சுழி வடிவில் கட்டுப்படுத்தினார். இதன் பிறகே இறைவனால் படைக்கப்பட்ட அனைத்துப் உயிர்களின் இயங்கங்களும் தொடங்கின.
இக்கதை நமக்கு தெரிவிப்பது என்னவென்றால், விநாயகப் பெருமானே தனது பெருவயிற்றில் வைத்துப் பரிபாலிக்கும் பிரபஞ்சத்தில் அகமர்தசன மகரிஷி அவர்கள் மூலம் உ என்னும் பிள்ளையார் சுழியை, அம்மையப்பருடைய பிரணவ நேத்திர தரிசனங்களிலிருந்து உருவாக்கி, இந்த படைப்பு இயக்கத்தை துவக்கினார்.
இதன் காரணமாகவே, நாம் எந்தக் காரியத்தையும் தொடங்கு முன் உ என்ற பிள்ளையார் சுழியிடுகின்றோம். எந்த செயலை தொடங்கு முன்பும் அகமர்சன மகரிஷியை வணங்கி பிள்ளையார் சுழியுடன் தொடங்கினால் அவரை படைத்த விநாயகப் பெருமான் அகமகிழ்ந்து நமக்கு வெற்றியை அருள்வார் என்பது ஐதீகம்.



