சப்த கன்னிமார்களின் வரலாறு
சப்த கன்னிமார்கள் தோன்றிய கதை .மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோர்தர புராணம், தேவி பாகவதம் போன்ற புராணங்களில இருந்து நமக்கு கிடைக்கின்றன.
தங்கள் குலதெய்வம் யாதென்று அறியாதவர்கள் இந்த ஏழு கன்னிமார்களை குலதெய்வமாக பாவித்து வழிபட்டால் குல தெய்வத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற வழக்குச் சொல் உள்ளது. அதை சிவபுராணத்தில் வரும் இந்த கதை மூலம் சுருக்கமாக அறியலாம்.
ஒருமுறை சிவபெருமான் மேரு மலையில் தியானத்தில் இருந்தார், அப்பொழுது பார்வதி தேவி விளையாட்டாகத் தன் கைகளைக் கொண்டு சிவபெருமானின் கண்களை மூடினார். இதனால் அண்ட சராசரங்களும் இருளில் மூழ்கியது.
இதனைக் கண்டு பயந்த பார்வதி தேவியின் கைகளில் வடிந்த வியர்வை மூலம், கரியநிறமும் கண் பார்வையற்றும் ஒரு குழந்தை பிறந்தது அக்குழுந்தைக்கு அந்தகாசூரன் எனும் பெயரிடப்பட்டது.
சிவபெருமான் அவர்கள் குழந்தை அந்தகாசூரனைக் குழந்தைப் பேறு இல்லாமல் தவித்த அசுர குல தலைவன் இரணியாட்சனிடம் வளர்க்க ஒப்படைத்தார். ஆண்டுகள் பல கடந்த பின், இரணியாட்சனின் மறைவிற்குப் பிறகு, அந்தகாசூரன் அசுரர்களின் தலைவரானார்.
அதன் பின் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்த அந்தகாசூரன், அந்த தவப்பயனாகக் கண்களில் பார்வை வரப்பெற்றான். ஆனாலும் இறுதியில் சிவபெருமானால் அழிக்கப்படுவாய் எனப் பிரம்மா கூறி மறைந்தார்.
பார்வை கிடைக்கப்பெற்ற அந்தாசூரன், இந்திரன் முதலான தேவர்களை போரிட்டு வென்று மூவுலகங்களை கைப்பற்றினான். இதனால் ஏற்பட்ட ஆணவத்தால் இறுதியில் மேரு மலைச் சென்று, தியான நிலையிலிருந்த சிவபெருமானின் அருகில் இருந்த பார்வதி தேவியைக் கவர்ந்து செல்ல முயன்றான். அப்போது அசுரர்களுக்கும் சிவகணங்களுக்கும் போர் மூண்டது.
இதில் சிவகணங்களால் அசுரப்படைகள் அழிந்தது. போரில் மகாவிஷ்ணு அந்தகாசூரனின் தலையைக் கொய்தார், அதன் வழியாக பீரிட்டு விழுந்த இரத்தத்தின் மூலம் புதிது புதிதாக அந்தகாசூரர்கள் தோன்றினர்.
மகா விஷ்ணு அவனுக்கு சிவபெருமான் மூலமே மரணம் என்ற தான் அழித்த வரத்தை சிவனுக்கு ஞாபக படுத்தினார். புதிதாக தொன்றும் அந்தகாசுரனை அழிக்கும் பொருட்டு சிவன், தன் மூன்றாம் கண்ணின் பொறியில் இருந்து அக்கினியை ஏவி யோகேசுவரி என்ற சக்தியை தோற்றுவித்தார்.
அந்த யோகேஷ்வரியானவர் மகேஷ்வரி என்ற சக்தியை உருவாக்கினார். மகேஷ்வரிக்கு துணையாக பிரம்மா அவர்கள் பிராம்மியை தோன்றுவித்தார். மகா விஷ்ணு வைஷ்ணவியை தோற்றுவித்தார்.
இந்திரன் இந்திராணியையும், முருகன் கௌமாரியையும், வராக மூர்த்தி வராகியையும், சண்டி தேவி சாமுண்டியையும் தோன்றுவித்தனர்.
இவ்வாறு தோன்றிய சப்தகன்னியர் அந்தகாசூரனின் இரத்தம் தரையில் விழுவதற்கு முன் அதனைக் குடித்தனர். இறுதியில் சிவபெருமான் தன் சூலத்தால் அந்தகாசூரனின் தலையைக் கொய்தார். அந்தகாசூரன் இறக்கையில், சிவபெருமானின் பெயரை உச்சரித்துக் கொண்டே மாண்டதால், சிவகணங்களில் ஒருவராக மாற்றி ஆட்கொண்டான் சிவபிரான்.
போர் முடிந்ததும் சிவபெருமானின் மூன்றாம் கண்ணின் பொறியில் இருந்து வெளி வந்த சப்த கன்னிகைகள் சென்று தங்க இடம் இல்லை. எனவே, அவர்கள் பார்வதி தேவியிடம் சென்று அடைக்கலம் ஆகினர். அவளும் அவர்களை அப்போது ஸும்பா மற்றும் நிஷும்பா எனும் அரக்கனுடன் சண்டையில் இருந்த சாமுண்டா எனும் காளிதேவிக்கு யுத்தத்தில் துணை இருக்க அனுப்பினாள்.
யுத்தம் முடிந்து திரும்பிய கன்னிகைகளை தான் வசிக்கும் ஸ்ரீ வித்யாவின் நான்கு மூலைகளையும், நான்கு வாயில்களையும் பாதுகாக்கும் பணியில் அமர்த்திவிட பார்வதி தேவிக்காகவே சேவகம் செய்தபடி தங்க இடமும் அந்த கன்னி தேவதைகளுக்கு கிடைத்தது.
கிராம புறங்களில் கன்னிமார் என அழைக்கப்படும் போர் குணம் கொண்ட பரிவார பெண் தெய்வங்கள் ஏழு ஆகும். இவர்கள் சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் அழைக்கப்படுகின்றனர். அங்கு காவலுக்கு கருப்பண்ண சாமியை முன்னிறுத்தி பின் கீழ்கண்ட வரிசையில் ஏழு கன்னிகளும் வீற்றிருப்பர்.
அவர்கள்
1.பிராம்மி
2. மகேஸ்வரி
3 கௌமாரி
4.வைஷ்ணவி
5.வராகி
6.இந்திராணி
7.சாமுண்டி
ஆகியோர் ஆவர்.
புரதான சிவாலயங்களில் கருவறைக்கு தெற்கு பகுதியில் வடக்கு நோக்கி அமர்ந்து அருள் புரிகிறார்கள் சப்த மாதாக்கள். மகா கவி காளிதாசன் இயற்றிய குமார சம்பவம் என்ற நூலில் சிவ பெருமானின் பணிப் பெண்கள் சப்த மாதாக்கள் என்ற சொற்றொடர் வருவதை இங்கு ஒப்பு நோக்க வேண்டியுள்ளது.
விநாயகர் மற்றும் வீரபத்திரர் ஆகியோர் காவல் காக்க சிவ பெருமானின் வீதி உலாவின் போது சப்த கன்னியர் நடனமாடி வருவதாக சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார். எனவே தான் சிவாலயங்களில் இடது புறம் விநாயகர் மற்றும் வலது புறம் வீரபத்திரர் ஆகியோர் உடன் ஏழு கன்னி பெண்களும் அமர்ந்து அருள் பாலிக்கன்றனர்.
ஆனால் பெண் தெய்வ கோவில்களில் உள்ள சப்த மாதாக்கள் வரிசை கிரமம் மாறுபடுகிறது.
1.பிராம்மி
2. மகேஸ்வரி
3 கௌமாரி
4.நாராயணி
5.வராகி
6.ஐந்திரி
7.சாமுண்டி
அடுத்து பராசக்தி மூலவர் வரும் படி அமைந்திருக்கும்.
ங்கள் குலதெய்வம் யாதென்று அறியாதவர்கள் சப்த கன்னியர்களை குலதெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சப்தமாதக்கள் பற்றி தனியாக விரிவான தகவல்களை தனித்தனியாக அடுத்து பார்ப்போம்.


